இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் அமைச்சரவையின் அனுமதியுடன் கைச்சாத்திடுவதற்கான பூர்வாங்க ஏற்படுகள் நிறைவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஏப்ரல் மாதம் குறித்த ஒப்பந்தம் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு எட்கா ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையினை ஆரம்பித்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று அமைச்சரவை அனுமதியின் பின்னர் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.