சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமது பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்குமாறு சரத்பொன்சேகா நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
சரத் பொன்சேகாவிடம் நாம் ஒரு விடயத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
அதாவது பணி இடைநிறுத்தம் பதவி நீக்கத்தை தடுக்குமாறு கோரி சரத் பொன்சேகா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாயின் அதற்கான காரணத்தை நாம் கூறுகின்றோம்.
அதுமாத்திரமல்ல நேற்று இணையதளம் ஒன்றில் ஒரு செய்தி பதிவாகியிருந்தது.
அதாவது சரத்பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
டயனா கமகேவின் கணவர் சரத்பொன்சேகாவின் முன்னாள் செயலாளராவார். சரத் பொன்சேகாவின் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.
ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிப்பதாயின் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும் அவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளுக்கு கட்சிக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாயின் ஜனாதிபதியுடன் இணைய வேண்டும்.
இருவேறு நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் அங்கம் வகிக்க முடியாது.
எனவே சரத்பொன்சேகா கட்சியில் இருந்து வெளியேறுவதாயின் எம்மிடம் அறிவித்துவிட்டு செல்லலாம்” என எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.