முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28.02.2024 அன்று சுகவீனம் காரணமாக அரச மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைகள் மற்றும் விமான நிலைய நடைமுறைகளையடுத்து நேற்றையதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
வவுனியா கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து 11 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இன்று மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், அனைத்து இடங்களிலும் துக்கதினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன், சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் மற்றும் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.