பரேட் சட்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசாங்கம் இடைநிறுத்தியதாக அறிவித்த போதும் தனியார் வங்கிகள் ஏலத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பரேட் சட்டம் டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி கூட நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வணிக வங்கிகள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. பரேட் சட்டத்தின் கீழ் தனியார் வங்கிகள் ஏலத்தை நடத்தும் போது
சட்டத்தை நிறைவேற்றுவதில் எந்தப்பலனும் இல்லை.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் மற்றும் வேலைவாய்ப்பில் 52 சதவீத பங்களிப்பு செய்கின்ற
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினரே இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்தான் இந்தப் பிரச்சினையை இன்று நான் சபையில் எழுப்புகிறேன்.
அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கூட வணிக வங்கிகள் நடைமுறைப்படுத்தாவிடின்
அமைச்சரவையொன்று இருந்து பயனில்லை. நீங்கள் அமைச்சர்களாக இருந்தும் பயனில்லை
நாட்டில் வங்கிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை முக்கியமானது.
சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடி ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையை முன்வையுங்கள். வங்கிக் கட்டமைப்புக்கு நெருக்கடிகள் ஏற்படாத விதமான திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
இதற்கு நாமும் ஆதரவளிப்போம். பரேட் சட்டம் தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இன்று பதில் வழங்குவதாக கூறினார். தனியார் வங்கிக்கு இடமளித்து செய்ய வேண்டியதை எல்லாம் செய்து பின்னர் இதனை நிறைவேற்றி பயனில்லையல்லவா? இந்த இடைக்காலத்தின் போது மத்திய வங்கியின் ஊடாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுங்கள் எதிர்க்கட்சியால் இதற்கு ஆதரவளிக்க முடியும்.
இந்த வாரம் பத்திரிகைகளைப் பார்க்கும்போது, வணிக வங்கிகள் போட்டிக்கு ஏலம் விட்டு வருகின்றன.
மத்திய வங்கியே இந்நாட்டில் வங்கிக் கட்டமைப்பை நிர்வகித்து வருகிறது. மத்திய வங்கியால் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரிக்க முடியுமானால் இவ்வாறான சுற்றறிக்கையை விடுக்கவும் முடியாதா” இவ்வாறு சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.