கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையின் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரை தேரர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அத்தனகல்ல, யடவக்க பிரதேசத்தில் சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை மீட்க குறித்த சந்தேகநபரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இதன்போது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.