ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற உண்மை தனக்குத் தெரியும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மைத்திரிபால கூறியதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.ஏனெனில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நான் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளேன். தாக்குதல் அன்று சிங்கப்பூரிலிருந்து வருவதற்கு விமானம் இல்லையென கூறினார்.
அப்போது அவரை அழைத்துவர நாம் விமான நிலையத்திற்கு சென்றபோது அங்கு 4, 5 விமானங்கள் இருந்தன. அவர் மிகப்பெரிய பொய்யொன்றையே கூறினார். நாட்டை நாசமாக்கியதற்கு பிரதான காரணம் அவர் தான். பாதுகாப்பு அமைச்சுக்கு, பிரதமர் வருவதற்கான அனுமதியை அவர் வழங்கியிருக்கவில்லை.
இவ்வாறான ஒரு நிலைக்கு நாடு தள்ளப்பட்டதாலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது. நடந்த தாக்குதலுக்கு அவரே பதில் கூற வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் யாரென அவருக்கு தெரியுமாக இருந்தால் இவ்வளவு நாட்கள் எதற்காக கூறாமல் இருந்தார். இது என்ன நகைச்சுவை” இவ்வாறு ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.