கோத்தாபய ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது அவருடைய குடும்பத்துக்குள்ளேயே போதிய வரவேற்பைப் பெறவில்லை என்று தெரிகிறது. அவர் தன் நிலைப்பாட்டில் மாறவில்லை என்பதை அந்தப் புத்தகம் நிரூபிப்பதாக அதை வாசித்தவர்கள் கூறுகிறார்கள். அதைவிட முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் தற்காப்பு நிலையில் காணப்பட்ட அவர் இப்பொழுது தன்னை நியாயப்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு வந்துவிட்டார் என்பதுதான் அந்த நூலில் உள்ள செய்தி. அதாவது ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் ஒரு நிலையை நோக்கி முன்னேறி வருகிறார்கள் என்று பொருள்.
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பஸில் தெரிவித்த கருத்துக்களும் அதைத்தான் அதாவது ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டுவெடிப்பைக் குறித்து புதிதாகத் தகவல்களை வெளியிடப் போவதாகக் கூறுகிறார்.
பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைத்தால் அதில் வெற்றி பெற்ற கட்சி அல்லது கூட்டு,பொதுத் தேர்தலில் போட்டியிடும்பொழுது, இயல்பாகவே மக்கள் அதை நோக்கிப் போவார்கள். அந்தக் கூட்டின் வெற்றி என்பது ஒரு முற்கற்பிதமாக அமையும். அது மக்களை முன் முடிவுகளோடு வாக்களிக்கச் செய்யும். அதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அதற்குப் பின் நடக்கக்கூடிய தேர்தல்களில் வாக்காளர்களின் மனோநிலையின் மீது செல்வாக்கைச் செலுத்தலாம் என்று பொருள். எனவே மக்கள் இயல்பாக முன் முடிவுகள் இன்றி வாக்களிப்பதற்கு முதலில் பொதுத்தேர்தலில் வைக்க வேண்டும், பின்னர் ஜனாதிபதித் தேர்தலை வைக்கலாம் என்று பசில் கூறியுள்ளார். அதை மஹிந்தவும் ஆதரித்துள்ளார். அதாவது தாமரை மொட்டுக் கட்சி முதலில் பொதுத்தேர்தல் வைப்பதை வலியுறுத்துகின்றது.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பொதுத் தேர்தலை அவர்கள் முதலில் வைக்கவில்லையே? இப்பொழுது மட்டும் ஏன் மக்கள் முன் முடிவுகள் இன்றி சுயாதீனமாக, சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்? ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலை வைத்தால் அதில் சில சமயம் ரணில் வெல்லக் கூடும். அத்தேர்தலில் அவர் ராஜபக்சக்களின் பொது வேட்பாளராக இறங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் அவர் பெறக்கூடிய வெற்றியானது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வருவதற்கான ஒரு பரிசாகவே பார்க்கப்படும். அது இயல்பாகவே ரணிலின் பேரம் பேசும் பலத்தை அதிகப்படுத்தும். அவ்வாறு தனது பேர பலத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின், ஒரு பொதுத் தேர்தலை அவர் வைப்பாராக இருந்தால், அப்பொழுது ராஜபக்சக்கள் ஒப்பிட்டுளவில் பலவீனமாக இருப்பார்கள். யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும்? யார் யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்? போன்ற விடயங்களில் ரணிலின் கை பலமாக இருக்கும்.
சரி அப்படியென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை வைத்தால் என்ன நடக்கும்? பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் சொந்தக் கட்சியை விடவும் ராஜபக்ஷர்களின் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கிராமப்புறங்களில் யுத்த வெற்றிவாதம் இப்பொழுதும் சூடாகவே இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எனவே ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலில் யுஎன்பியை விட அதிக வாக்குகளை பெறுவார்களா இருந்தால், அவர்களுக்குப் பேர பலம் அதிகரிக்கும். அப்பொழுது அவர்கள் விரும்பிய அமைச்சைக் கேட்டுப் பெறலாம். நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் முதலில் பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றார்களா?
ஆனால் ராஜபக்சக்கள் ஒன்றை நினைக்க, மேற்கு நாடுகள் வேறு ஒன்றை நினைப்பதாகத் தெரிகிறது. ராஜபக்சக்கள் மீண்டும் பலமடைந்து அதாவது தற்காப்பு நிலையிலிருந்து தாக்கும் நிலைக்கு வருவதை, மேற்கு நாடுகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணிகள் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளாரா?
அவர் கூறுவது உண்மையா பொய்யா? அவருக்கு பின் யார் இருக்கிறார்கள்? என்பதற்கெல்லாம் அப்பால்,ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றி ஞாபகப்படுத்துவது என்பது,அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கையில் அதைச் செய்வது என்பது,ராஜபக்சக்களுக்கு பாதகமானது.சிலசமயம் மைத்திரி கூறப்போகும் தகவல்கள் கிறீஸ்தவர்களைக் கோபமடையச் செய்யலாம். கர்தினால் மல்க்கம் ரஞ்சித் மீண்டும் ஒரு சுயாதீன விசாரணையைக் குறித்துக் கேட்கலாம். இவையெல்லாம் ராஜபக்சங்களுக்குப் பாதகமானவை. அதாவது வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் முன்னுக்கு வர முடியாத ஒரு நிலைமையை அது தோற்றுவிக்கலாம். எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளிப்படுத்தப்படக்கூடிய புதிய தகவல்கள் ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் தற்காப்பு நிலைக்கு தள்ளக்கூடியவைகளாக இருக்கக் கூடும். அவர்களை “ஹை ப்ரோபைலில்” இருந்து “லோ ப்ரோபைல்” நிலைக்கு மாற்றுவது அதன் நோக்கமாக இருக்கலாம். அதாவது ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வழிகளை இலகுவாக்கிகி கொடுப்பது?
மேற்கு நாடுகள் ஆகட்டும், ஐநாவாகட்டும், பன்னாட்டு நாணய நிதியம் ஆகட்டும் அனைத்துமே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வருவதைத்தான் விரும்புகின்றன. அவர்களுக்கு ரணிலை விட்டால் வேறு தெரியவில்லை. ஏன் ராஜபக்சங்களுக்கும் மகா சங்கத்துக்கும்கூட ரன்னிலை விட்டால் வேறு தெரிவில்லை. தேர்தலை முன்னிட்டு பன்னாட்டு நாணய நிதியம் அவரைப் பலப்படுத்த விளையும். அது மட்டுமல்ல, படித்த ஆங்கிலம் தெரிந்த மேல் தட்டு வர்க்கத்தின் மனதில் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டு வருகிறார் என்ற ஒரு கருத்து பலமடைந்து வருகிறது.
நாட்டுக்குள் வரும் உல்லாசப் பயணிகளின் தொகை முன்னுரை விட அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் தொகையும் அதிகரித்து வருகிறது. தவிர மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமை, எரிபொருள் விலையை அதிகரித்தமை, வரியை அதிகரித்தமை போன்ற நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தின் வருமானம் பெருகி வருகிறது. இவை போன்ற பல காரணங்களினாலும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மெல்ல மெல்ல மீட்டு வருகிறது என்ற ஒரு கருத்து உயர் குழாத்தின் மத்தியில் உண்டு.
ஆனால் நடுத்தர வர்க்கம் கீழ் நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் அவ்வாறு இல்லை. அவர்களில் அநேகர் ஜேவிபிக்கு ஆதரவாகவே காணப்படுகின்றார்கள். இளம் பட்டதாரிகள் ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாதுள்ளது என்று புலம்புகிறார்கள். ஒரு மோட்டார் சைக்கிள் 8 லட்சத்துக்கு மேல் போகின்றது. ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்க முடியாத ஒரு நாட்டை விட்டு அவர்கள் வெளியேறத் துடிக்கிறார்கள். அல்லது ஜேவிபியை ஆதரிக்கின்றார்கள். இப்படிப்பட்டதோர் பின்னணியில், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால், அதில் வாக்குகள் மூன்றாகப் பிரியும் நிலைமைகள் அதிகரிக்கின்றன.
ரணிலை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர விரும்பும் மேற்கு நாடுகள், ராஜபக்சக்கள் அவருக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று நம்புகின்றன. இந்தியா இந்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?
ரணில் புத்திசாலி, தந்திரசாலி. எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக் கூடியவர்.அப்படிப் பார்த்தால், இந்தியா அவரைக் கையாள்வது கடினம். ஆனால் இந்த விடயத்தில் ரணில் முந்திக் கொண்டு விட்டார் என்று தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இந்தியா தனக்கு எதிராகச் சிந்திக்கக் கூடாது என்று திட்டமிட்டு அவர் உழைக்கிறார். அதனால்தான் மூன்று தீவுகளிலும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பான உடன்படிக்கை இம்மாதம் முதலாம் திகதி கைச்சாத்தாகியது. அதைவிட முக்கியமாக ராமர் பாலத்தை மீண்டும் கட்டப் போவதான ஒரு தோற்றத்தை அவர் வெற்றிகரமாகக் கட்டியெழுப்பி வருகிறார்.அவர் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி. அவர் பாலம் கட்டத் தயார் என்று பகிடிக்குக் கூற முடியாது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் மோடியின் ஆட்சியின் கீழ் அடைந்து வரும் அபரிதமான வளர்ச்சி, குறிப்பாக தமிழகம் அடைந்து வரும் அபரிதமான வளர்ச்சி,என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது,அந்தப் பாலம் ஊடாக சிறிய இலங்கை தீவு இந்தியாவால் விழுங்கப்பட்டு விடும் என்ற அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைப்பது இலகுவானது.அதை ரணில் எப்படி எதிர்கொள்வார்?
அவரைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் வரையிலும் இந்தியாவைச் சமாளித்தால் போதும். ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா அவருக்கு எதிராகச் செயல்படா விட்டால் சரி என்று அவர் சிந்திப்பதாகத் தெரிகிறது.
ஆக மொத்தம், ரணில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கித் தன்னைப் பலப்படுத்தி வருகிறார் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது. ஆனால் மூன்றாகப் பிரியப் போகும் சிங்கள வாக்குகள் யாரைத் தெரிவு செய்யும்?