அமெரிக்க தொண்டு நிறுவனமான world central kitchen ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேலின் வான் வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு விநியோகித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த ஏழு பேரும் இஸ்றேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் போலந்து, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் சாரதி பாலஸ்தீனர் எனவும் ஹமாஸ் தெரிவித்தது.
இதனிடையே, world central kitchen அமைப்பின் வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தமை குறித்து இஸ்ரேல் கவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேல் இராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியதாவது,
“உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தமை வருத்தம் அளிக்கிறது. இந்த தாக்குதல் கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது,
“இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் கொல்லப்பட்டதமைக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.
மேலும், பொதுமக்களைப் பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.