முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி புகழேந்தி ஆதவன் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த மூவர் மீதும் ஏற்கனவே விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் தமது விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து தற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த மூவரும் சட்ட விரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியா சென்றமை குறித்து புலனாய்வுப்பிரிவினர் கடும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடவுச்சீட்டு இன்றி இந்தியா சென்ற விவகாரம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாக சட்டத்தரணி புகழேந்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் குறித்த மூவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார்.
எனினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றின் ஊடாக பிணையில் அழைத்துவர முடியும் என சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டார்.