நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இரண்டு முதலீட்டு வலயங்களுக்கு கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரால் அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முதலீட்டுச் சபையின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தெற்காசியப் பிராந்தியத்தில் விசேட பொருளாதார வலயங்களை நிறுவுவதில் இலங்கையே முன்னோடியாகும்.
கட்டுநாயக்க மற்றும் பியகம போன்ற முதலீட்டு வலயங்களுக்கு பிரதான முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் வெற்றியடைந்துள்ளது.
முதலீட்டுச் சபை நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு 45 வருடங்களாகின்றன.
ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு பியகமவில் இருந்து முதலீட்டு வலயத்தை உருவாக்குவது சாத்தியமற்றது எனக் கூறி வெளியேறியது.
ஆனால், பியகமவில் முதலீட்டு வலயத்தை உருவாக்க முடியும் என அன்றிலிருந்த முதலீட்டு சபையிலுள்ள பொறியியலாளர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் அவர்கள் பியகம முதலீட்டு வலயத்தை உருவாக்கினர். இந்த நாட்டில் முதலீட்டு வலயங்களின் ஆரம்பம் அப்படித்தான் நடந்தது.
இந்த இரண்டு முதலீட்டு வலயங்களிலும் எல்.ரீ.ரீ.ஈயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
மேலும் ஜே.வி.பியின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த இரண்டு முதலீட்டு வலயங்களையும் பாதுகாக்க, உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் கோரினர்.
எப்படியாவது அந்த அச்சுறுத்தல்களிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டோம். மேலும், இந்த முதலீட்டு சபைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து பாதுகாக்கப்பட்டன.
மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். நீங்கள் அனைவரும் அதற்கு முகங்கொடுத்தீர்கள்.
பொருளாதார ரீதியில் அவர்கள் அனைவரினதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப இந்த நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும், இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்தது.
அடுத்து, நமது பொருளாதாரத்தை அதிக போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.