2024 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் 20,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் குறைவடைந்துள்ளதாகவும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 22.8 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனவரியில் 10,417 பேரும், பெப்ரவரியில் 6007 பேரும், மார்ச் மாதத்தில் 3615 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு மாநகர சபையில் கஸ்பேவ, கடுவெல, மஹரகம, பியகம, கம்பஹா, வத்தளை, குருநாகல், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்கள் டெங்கு அபாயப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இல்லாத வகையில் தாம் வாழும் சூழலைச் சுத்தப்படுத்துவதில் பொதுமக்களின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.