அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்சினை தொடர்பான அவருடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
அவர் மொழிப் பிரச்சினை பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்.மரபுரிமைச் சொத்துகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு காலம் தன்னுடைய சிறு பிராயத்தில் தன்னுடைய கிராமத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன பேதம் இன்றி ஒன்றாக வாழ்ந்ததைக் கூறுகிறார். சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் ஒரு மக்கள் மயப்பட்ட விடயம் அல்ல என்றும் கூற வருகிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை அவர் இன்னமும் வெளிப்படையாக உறுதியாக ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை.ஆனால் அதைப் பரிசீலிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு ஜேவிபி வந்துவிட்டது. இவைதான் அவர் பேசியவற்றின் சாராம்சம்.
தமிழ் லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு அவை உற்சாகமூட்டக்கூடிய கருத்துக்கள்.இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு புதிய வெளிச்சம் தோன்றியிருப்பதாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், அனுராவிடம் ஆழமான சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
கேள்வி ஒன்று, இலங்கைத் தீவு பல்லினத்தன்மை மிக்கது என்பதனை ஜேவிபி ஏற்றுக்கொள்கின்றதா?
ஆயின்,இரண்டாவதாக,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஜேவிபி ஏற்று கொள்கின்றதா?
அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால், ஒரு தேசிய இனத்திற்குள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜேவிபி தயாரா?
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வு என்று பார்க்கும் பொழுது, தமிழ் மக்கள் இப்பொழுது கூட்டாட்சியைத் தான் கேட்கின்றார்கள். உலகம் முழுவதிலும் உயர்ந்த ஜனநாயகங்களில் கூட்டாட்சி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறைமையாகக் காணப்படுகின்றது. ஜேவிபி தமிழ் மக்களுக்கு ஒரு கூட்டாட்சி தீர்வைத் தரத் தயாரா?
இதைத் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதனை விடவும்,இலங்கை முழுவதுக்குமான ஒரு தீர்வு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியானது அந்த அடிப்படையில், பல்லின; பல் சமய ; இரு மொழிப் பண்பைப் பேணும் விதத்தில் ஒரு தீர்வைதான் முன்வைக்க வேண்டும். உலகில் பல்லினத்தன்மை மிக்க நாடுகளில்; பழமொழி ;பல மதங்கள் ; பயிலப்படும் நாடுகளில் ; கூட்டாட்சி அதாவது சமஸ்டி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே சமஸ்ரித் தீர்வு எனப்படுவது தமிழ் மக்களுக்கு உரியது என்பதை விடவும், இலங்கைத் தீவை ஒரு தேசமாகக் கட்டி எழுப்புவதற்கானது என்பது தான் மிகச் சரியான விளக்கம்.
நாலாவது கேள்வி, 2009க்கு முன்பு ஆயுத மோதல்களின் போது ஜேவிபி போரை ஆதரித்தது. போரில் ஈடுபடும் படை வீரர்களை ஆதரித்தது. படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. அதுதொடர்பாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா?
ஐந்தாவது கேள்வி,இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. அதாவது தமிழ் மக்களின் தாயகத்தை சட்ட ரீதியாகப் பிரிக்க முற்பட்ட ஒரு கட்சி.அவ்வாறு தமிழ் மக்களின் தாயகத்தைச் சட்ட ரீதியாகப் பிரித்தமைக்காக தமிழ் மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ? இதை ஐநா தீர்மானங்களின் வார்த்தைகளில் கேட்டால், ஜேவிபியானது, இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுமா? இறந்த காலத்தில் அது தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறுமா?
ஐந்தாவது கேள்வி, ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது அது இந்தியத் தமிழர்களை குறிப்பாக, மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் காட்டியது.இப்பொழுதும் ஜேவிபி அதே நிலைப்பாட்டோடுதான் காணப்படுகின்றதா? அது தொடர்பாக மலையக மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ?
மேற்கண்ட கேள்விகள் தமிழ் மக்களால் அனுரகுமரவிடம் பகிரங்கமாகக் கேட்கப்பட வேண்டியவை. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால், தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான கூட்டுரிமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அனுரகுமார உதிரியாகப் பேசுகின்ற மொழிப் பிரச்சினை; வழிபாட்டுப் பிரச்சினை; காணிப்பிரச்சினை; கல்விப் பிரச்சினை…முதற்கொண்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் வரை அனைத்தும் அந்தக் கூட்டு உரிமைகளுக்குள் அடங்கும்.
தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு தீர்வைதான் கேட்கின்றார்கள். எனவே கோட்பாட்டு ரீதியாகவும் அரசறிவியல் அர்த்தத்திலும் ஜேவிபி முதலில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவாகக் கூற வேண்டும்.
இனப்பிரச்சனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்ல.முதலில் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினை எனப்படுவது, இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை பெரிய இனமாகிய பெரிய மதமாகிய சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தமைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அவர்கள் அழிக்க முற்பட்டார்கள். தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் மொழி, நிலம், பண்பாடு ,பொருளாதாரம் போன்ற அம்சங்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளை அழிப்பதுதான்.
எனவே இனப்பிரச்சினை தோன்றியது எங்கிருந்து என்றால், இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதில் இருந்துதான். அதற்குத் தீர்வும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால்,இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதில் இருந்துதான்.
இதைத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து சொன்னால்,தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதான் அதைத் தொடங்கலாம். ஆனால் ஜேவிபி அவ்வாறான அரசறிவியல் ஆழத்துக்குள் இறங்கத் தயார் இல்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதன்மூலம், சமஸ்ரித் தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்வதன்மூலம், தென்னிலங்கையில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயார் இல்லை.
அதேசமயம் தமிழ் வாக்குகள் அவர்களுக்குத் தேவை.அனுரகுமார கூறுகிறார், நான் வாக்கு வேட்டைக்கு வரவில்லை, நான் தீர்வைத் தருகிறேன் வாக்கைத் தாருங்கள் என்று வியாபாரம் செய்வதற்கு வரவில்லை… என்று.
கேட்க அது கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஜேவிபியின் தீர்வு என்ன என்பதனை வெளிப்படையாகச் சொல்வதில் இருந்து அவர் தப்ப முயற்சிக்கின்றார். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பல தசாப்தங்களுக்கு முன் இருந்த நல்லுறவை மீளக்கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகிறார். அந்த நல்லுறவு எங்கே பாதிப்படைந்தது? தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அழிக்க முற்பட்ட பொழுதுதானே? அந்த நல்லுறவை எங்கிருந்து கட்டி எழுப்பலாம்? தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதானே ?ஆனால் ஜேவிபி அதை வெளிப்படையாகச் சொல்ல தயாரில்லை.
இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு 13 பிளஸ் தீர்வு என்று வெளிப்படையாகக் கூறி வருகிறார். ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள்தான் தீர்வு என்கிறார். ஆனால் ஜேவிபி தீர்வை வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றது.
அதாவது, ஜேவிபி வெளிப்படையான, அரசியல் அடர்த்தி மிக்க, வார்த்தைகளுக்கு ஊடாக கதைப்பதைத் தவிர்த்து, மழுப்பலான, பொத்தாம் பொதுவான, சமூகநீதி மற்றும் மனித உரிமைகளின் பாற்பட்ட வார்த்தைகளுக்கு ஊடாகப் பேச விளைகின்றது. அந்த அமைப்பில் இருந்து விலகிய ஒருவர் எழுதிய நாட்குறிப்பில்…“மகிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகத் தெரியும் ஓர் இனவாதி. ஆனால் ஜேவிபியோ சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி” என்று கூறியிருப்பது தவறு என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஜேவிபி இக்கட்டுரையில் முன் வைக்கப்படும் பகிரங்க கேள்விகளுக்கு பதில் கூறுமா?