கிளிநொச்சி, கண்டவளைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் கடுமையான அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து புலவு பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் உட்புகுந்து அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் வாழும் சுமார் 300 மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமது ஜீவனேபாயத்துக்காக விவசாயச் செய்கையினை மேற்கொண்டு வரும் அம்மக்கள், தென்னை, வாழை, பூசணி போன்ற பயிர்களை யானைகள் அழித்து வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவும் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த ஆறு காட்டு யானைகள் 120 இக்கும் மேற்பட்ட வாழைகள், 50 இக்கும் மேற்பட்ட தென்னைகள் என்பவற்றை அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதோடு சிலர் உறவினர் வீடுகளில் இரவு தங்கும் அவல நிலைமையும் அங்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், நிரந்தரமான யானை வேலி ஒன்றை அமைத்துத் தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.