”மைத்ரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவானது அரசியல் சதித் திட்டமாகும்” என கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பாரிய சவால் மிகுந்த ஒரு வாராமாகும். இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை பாதுகாக்க வேண்டியுள்ளது.
நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில தீர்மானங்களையும் எடுக்க நேரிடும். வேறு சக்திகள் எமது கட்சிக்கு அதிகாரம் செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியல் இந்த நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்து நாம் முன்னோக்கி செல்வோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சிகளை ஆரம்பித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அதிகாரத்திற்குட்படுத்த முடியவில்லை.
கட்சியின் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.நாட்டு மக்களின் வரி சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. எமது கட்சியின் தலைவருக்கு நீதிமன்றத்தினால் தற்காலிக தடையுத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையுத்தரவு காலத்தில் பலர் தங்களுக்கேற்றவாறு தீர்மானம் மேற்கொள்கின்றனர்.எனவே இது அரசியல் சதி என்றே தெரிகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.