மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பக பிரதேச பொதுமக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் சூழலை பாதிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் தங்களுக்கு வேண்டாம் என்றும் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
பிரதேச செயலக பிரதான நுழை வாயில் கதவினை பூட்டியவாறு எவரும் உள்ளே செல்லாத வகையில் போராட்டம் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து நல்லதொரு பதில் தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதன்போது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் அருணன் வருகைத் தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பிரதேச சிவில் அமைப்புக்களை சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பான நேரடி கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க அதிபர் தரப்பில் பதில் கூறப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.