ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருள் வழங்குநராக இருப்பதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன், ஈரானில் இருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இலங்கை இறக்குமதி செய்கிறது.
இதன்படி, இலங்கைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் 61 ஆவது இடத்தை வகிக்கின்றது.
அதேநேரம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப்போராக உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.