பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால் மலையக மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அவ்வளவு பிரச்சினையிலும், அவர்கள் எமக்கு தேயிலையை பறித்துக் கொடுத்தார்கள்.
அந்தத் தேயிலையை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் ஊடாக, 2023 ஆம் ஆண்டு நாட்டுக்கு அந்நியச்செலாவணி அதிகரித்தது.
2024 ஆம் ஆண்டிலும் அந்நியச் செலாவணி அதிகரித்து வருகிறது. இதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நான் ஜனாதிபதி என்ற வகையில், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் வியர்வையால்தான் நாடு இன்று முன்னேற்றமடைந்துள்ளது.
இனியும் நாம் 2022 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி செல்ல மாட்டோம். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த மக்களுக்கு இனியும் தீர்வை வழங்காமல் நாம் இருக்கப்போவதில்லை.
நாம் தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளோம். இதனால், தனியார் துறையினரும் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளன. தற்போது எஞ்சியிருப்பது மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் மட்டும்தான்.
இதனால்தான், நாம் நேற்று இரவு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாயாக அதிகரித்துள்ளார். இந்த மக்களின் பிரச்சினைகளை நாம் மறக்கவில்லை. அடுத்த 10- 15 வருடங்களின் இவர்களின் வீட்டுப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும். எனது ஆட்சியில் மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு முன்வைக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதன அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி தொழில் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச நாளாந்த வேதனம் 1,350 ரூபாயாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த கொடுப்பனவு 1,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேயிலை கிலோவொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் 80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.