டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் மன்னா ரமேஷ் எனப்படும் ரமேஷ் பிரியஜனகவை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேஷ் அண்மையில் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலை, போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றங்கள் மன்னா ரமேஷ் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அண்மைக்காலமாக சில கொலைகள் இவரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று குறித்த சந்தேக நபரை நேற்று காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மன்னா ரமேஷை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.