அவதூறாகப் பேசியமை மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை மே 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் அவதூறாக கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் கடந்த நான்காம் திகதி தேனியில் வைத்து சைபர் க்ரைம் பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.
அத்துடன், அவர் பயணித்த காரில் கஞ்சா போதைப் பொருள் இருந்ததாகவும் தெரிவித்து அவருக்கு எதிராக கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றில் நேற்றைய தினம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சிறையில் அதிகாரிகள் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், இதனால் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் முறையிட்டார்.
அத்துடன், தனக்கு கோவை சிறையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையிலேயே, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சவுக்கு சங்கருக்கு எதிராக மேலும் பலர் முறைப்பாடு செய்துள்ளனர். இதனால் அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.