தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை ரொட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி, தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நேற்று உத்தரவிட்டது.
பொது இடங்களுக்கு கூட்டிச்செல்லும்போது, நாய்களுக்கு கட்டாயம் சங்கிலி, முககவசம் அணிவிக்க வேண்டும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதன்போது விதிக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு தற்போது திரும்ப பெற்றுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.