இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதானி – அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் நலனுக்காக மட்டும் உழைத்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ராகுல் காந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில தொழிலதிபர்களின் நலனுக்காக மோடி அரசு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. இது, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 24 ஆண்டு காலம் ஒதுக்கப்படும் நிதிக்கு சமமாகும்.
அதானி-அம்பானியின் நலனுக்காக மட்டுமே பிரதமர் மோடி அனுதினமும் உழைத்து வருகிறார்.
விவசாயிகள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஊடகங்கள் புறக்கணித்து வருகின்றன.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்களின் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், சிறு விவசாயிகள் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து, அக்னிவீர் திட்டத்துக்கு பதிலாக பாதுகாப்பு படைகளில் ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர வேலை ஆகிய திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.
அத்துடன், வேலையில்லா இளைஞர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் ஓராண்டு பயிற்சியை வழங்கி, தகுதியின் அடிப்படையில் நிரந்த அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ராகுல் காந்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.