நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இதனால் அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல்களின் போது அதிகளவான பிரான்ஸ் குடியிருப்பாளர்களை வாக்களிப்பதற்கு அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தமானது கனாக்கு எனப்படும் பழங்குடி மக்களின் வாக்குகளை பலமிழக்கச் செய்துவிடும் என சுதந்திர ஆதரவாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பல்வேறு கட்டிடங்கள் மற்றும் வணிக நிலையங்கள் சேதமடைந்துள்ளதுடன், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து ஒன்றுகூடல்களும் தடைசெய்யபட்டுள்ளதுடன், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உயர்ஸ்தானிகலாயம் குறிப்பிட்டுள்ளது.