இஸ்ரேல் அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், இன்று கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தசாப்த காலமாக அநியாயங்களுக்கு முகம் கொடுத்துவரும் பாலஸ்தீன மக்களுக்காக இலங்கையர்கள் என்றும் துணை நிற்பார்கள்.
பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
இஸ்ரேல் அரசாங்கமானது கொலைக்கார அரசாங்கமாக இன்று செயற்பட்டு வருகிறது.
பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக அழித்தொழித்து, அவர்களின் பூமியை தரை மட்டமாக்கி, அரச பயங்கரவாதத்தைத் தான் இஸ்ரேல் செய்து வருகிறது.
பாலஸ்தீன மக்களை உலகிலிருந்து காணாமல் செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலில் இந்த அரச பயங்கரவாதத்தை நாம் வண்மையாக கண்டிக்கிறோம்.
இந்தப் போரை உடனடியாக நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தி, பசியாலும் பாதுகாப்பில்லாமலும் வாழ்ந்துவரும் பாலஸ்தீன மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
காஸாவின் வைத்தியசாலைகள் மீதும் பாடசாலைகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகின்றன. சிவில் மக்களை கண்மூடித் தனமாகக் கொன்றுக் குவிக்கிறது.
இந்த அரச பயங்கரவாதத்தை நாம் என்றும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சமாதானத்திற்கு செல்ல வேண்டும் என்று பல தடவைகள் வலியுறுத்தியும், இஸ்ரேல் தாக்குதலை பின்வாங்காமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு, உடனடியாக இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
பாலஸ்தீன மக்களின் அனைத்து உரிமைக்காகவும் நாம் ஆதரவாக துணை நிற்போம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.