ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
கடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது.
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு, எதிராக தராதரம் பாராமல், சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஆள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆள் கடத்தல் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிக சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஆள் கடத்தலில் பலர் சிக்கி உள்ளனர்.
எனவே, இந்த ஏமாற்று முயற்சிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.
இந்த ஆள் கடத்தல் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0112 401 146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோருகிறோம்” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.