அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவுகூறும் உரிமை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆள்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகள் சிறிலங்கா படைத்தரப்புக்களினால் கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவதோடு, அவற்றினைத் தடுக்கும் செயற்பாடுகளில் தீவிரத் தன்மையுடன் ஈடுபடுகின்றமையினை அண்மைக்காலங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது.
ஈழப்போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முறையான உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல்களேதும் வழங்கப்படாதவொரு நிலையில் போரின் வடுக்களிலிருந்தும் அதன் கொடூர முகங்களிலிருந்தும் விடுபடுவதற்கான உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான மாற்றாக நினைவேந்தல் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.
படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய் இரங்கை அரசின் நீதிக்கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் அண்மைக்காலங்களில் நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் முன்னெடுப்பவர்களை அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் யாவும் தொடர்ந்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உளநெருக்கடிகளிற்கு உள்ளாக்குகின்றன.
அரசாங்கத்தின் இதுபோன்ற செயல்கள் யாவும் அனைத்துலகச் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயங்கள், பிரகடனங்களை மீறுவதோடு, இலங்கையின்; நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.