தேசிய மக்கள் கட்சியினருக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு இன்று (21) காலை மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினரும், வடமாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலமும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி கட்சியில் போட்டியிடும் அனுரகுமார திசாநாயக்க வடக்கில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஆதரவற்ற தன்மை காணப்படுவது குறித்தும் குறித்த பகுதியில் ஆதரவை பெறுவது தொடர்பாக கருத்துக்களை முன் வைத்தார்.
இதேவேளை எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை அனுரா குமார திசாநாயக்க மன்னருக்கு வருகை தந்து மக்கள் சந்திப்பில் ஈடுபடஉள்ளார் எனவும் இதன் போது மன்னார் மாவட்டம் தொடர்பில் தாம் கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் மக்களுக்கு கருத்தை தெரிவிக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் தற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 10 பிரதான பிரச்சனைகள் குறித்து தெளிவாக தமது கருத்தை முன் வைத்ததுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் ஜே வி பி கட்சி கரிசனையுடன் செயல்பட்டு முன்நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக காற்றாலை மின்சாரம், கனிம மணல் அகழ்வு, காணிகள் அபகரிப்பு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.