தியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதரட மெனிகே புகையிரதம் தற்போது பண்டாரவளை புகையிரத நிலையத்திலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு அஞ்சல் புகையிரதம் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற காலநிலையினால் புகையிரத பாதையில் மரங்கள் விழுந்துள்ளதாகவும், தியத்தலாவ இராணுவ முகாம் அதிகாரிகள் புகையிரத பாதையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி வருவதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.