உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன்.கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என மத்திய சுற்றுச்சூழல்த்துறை அமைச்சருக்கு இவ்விடயம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாக காரணம் கூறி, அந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம், நீதிமன்ற உத்தரவின்படி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை சீரமைக்கும் முயற்சிகளிலும் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டு குழுவானது (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் கேரள அரசின் கோரிக்கையை சேர்த்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.