தொழிலாளர்களுக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாத விடயம் கம்பனிகளின் உள்ளக பிரச்சினையாக இருந்தால் அந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை இரத்து செய்து புதிய முதலீட்டாளர்களக்கு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக வெளியிட்டு வர்த்தமானி 21 ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளதுடன், அன்றைய தினம் முதல் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1350 ரூபாவாகவும் விசேட கொடுப்பணவு 350 ரூபாவும் சேர்ந்து மொத்த சம்பளம் 1700 ரூபா அதிகரிக்கப்பட்டமை உறுதியானது எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்தோடு, 24 பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அரசுக்கு சொந்தமான தோட்டக் காணிகளை குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அதில் எவரேனும் அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்த முடியாது என தெரிவித்தால், அது தொடர்பில் ஆராய நிதியமைச்சு குழுவொன்றை நியமிக்கும் எனவும் அவர்; தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு தொடக்கம் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்த கம்பனிகள் இவ்வாறான சம்பளத்தை செலுத்த முடியாமல் போனால் அதற்குக் காரணம் வெளிப்பிரச்சினையா அல்லது அவர்களின் உள்ளக பிரச்சினையா என ஆராய்வது அக்குழுவின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தொழிலாளர்களுக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாதமை கம்பனிகளின் உள்ளக பிரச்சினையாக இருந்தால் அந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை இரத்து செய்து புதிய முதலீட்டாளர்களக்கு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.