”நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுடன் இணையமாட்டோம்” என யுதுகம தேசிய அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் சுயாதீனத்தன்மை பாதுக்காக்கப்படவேண்டும். ஆனால் இன்று மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதியே ஆட்சியை நடத்துகின்றார்.
நாட்டை வெளிநாடுகளுக்கு தாரைவார்ப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டை காட்டிக்கொடுப்பவர்களுடன் இணையமாட்டோம். இந்த நாட்டை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தினை கருத்திற்கொண்டே சர்வஜன பலய புதிய கூட்டணியை நாம் உருவாக்கியுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள், மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல் கூட்டணியினை இன்று உருவாக்கியுள்ளனர். சிங்கள பௌத்தத்தை மையமாக கொண்ட அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.