கேன்ஸ் திரைப்பட விழாவில் 2ஆவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது.
இதன் மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர் என்ற பெருமையைப் பாயல் கபாடியா பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த 14 ஆம் திகதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.இவ் விழாவில் உலகம் முழுவதுமிருந்து திரைத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்தவகையில் குறித்த விழாவில் இந்திய ஆவணப்பட இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் உருவான, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) திரைப்படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் கனி கஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பின் பங்குபெற்ற இந்திய திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.