ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கும் பாலம் சீரற்ற கால நிலைக் காரணமாக, பல மாதங்களாக உடைந்த நிலைமையில் காணப்படுகின்றமையால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வருட முற்பகுதியில் இங்கு பெய்த அடை மழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த வெள்ளத்தினால் இப்பகுதி பல பிரதான வீதிகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியிருந்ததோடு, ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கின்ற இந்த பிரதான பாலமும் உடைந்தது.
இதனால் வழமை போன்று செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சேவையும் இடம்பெறவில்லை எனவும் இச்சேவை தடைப்பட்டுள்ளமையால், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 125 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், இப்பகுதியில் வீடு இல்லாப் பிரச்சினை, பொது மயானப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பாலம் உடைந்துள்ளமையால், இப்பிரதேச வாழ் மக்கள் மேலும் பல்வேறு சவால்களுக்கும் அன்றாடம் முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அஷ்ரப் நகரில் இருந்து ஒலுவில் பகுதியை நோக்கி அத்தியவசியத் தேவைக்காக முச்சக்கரவண்டியில் செல்ல வேண்டும் என்றால்கூட 2000 ரூபாய் வாடகை செலுத்த வேண்டிய அவல நிலைமையே இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இப் பாலம் உடைந்து சுமார் 4 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதனை நிர்மாணிக்க இதுவரை எந்தவொரு தரப்பும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.