யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்துமாறுக் கோரி போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு அருகில் மதுபான சாலை இயங்கி வருகின்றமையால், பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதாகைகளை தாங்கியும் கோஷமெழுப்பியும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் பதாகைகள் தாங்கியவாறு உள் நுழைந்து ஊர்காவலத்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.