இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது. ஆரியகுளம் சந்தியிலும் முத்த வெள்ளியிலும் வெசாக் பந்தல்கள் அதிகமாக அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால் இம்முறை ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ஜனங்களே ஆரியகுளம் சந்தியில் காணப்பட்டார்கள்.
ஒரு ஊடகவியலாளர் கேட்டார், முள்ளிவாய்க்காலில் திரண்ட ஜனங்களை விடவும் ஆரிய குளத்தடியில் திரண்ட சனங்களின் தொகை அதிகமா? என்று. இல்லை. அது குறைவு தான். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களில் வழங்கப்பட்ட சாப்பாட்டை,சிற்றுண்டிகளை, குடிபானங்களை ,ஐஸ்கிரீமை தமிழ் இளையோர் விரும்பி வாங்கினார்கள்.
அவ்வாறு குடிபானங்களை வாங்கிய ஒரு இளைஞரிடம் ஒரு ஊடகவியலாளர் பின்வருமாறு கேட்டிருக்கிறார்…..”தமிழ் மக்கள் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைத்த பொழுது அதை ஒரு குற்றமாகக் கருதி, போலீசார் நான்கு பேர்களை கைது செய்து பின் விடுதலை செய்தார்கள். அதுபோலவே கிழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்துக் கொண்டிருந்தபொழுது போலீசார் அதைத் தடுத்து கஞ்சிப் பானையைத் தூக்கி கொண்டு போனார்கள். மேலும் அடுப்பை சப்பாத்து கால்களால் தள்ளி நகர்த்தினார்கள். கிழக்கில் கஞ்சி காய்ச்சியதை ஒரு குற்றமாகக் கூறிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகிய படையினர் வெசாக் பந்தல்களில் வைத்து வழங்கிய குடிபானங்களை நீங்கள் ஏன் வாங்கிக் குடிக்கிறீர்கள்?” என்று. ஆனால் அதை வாங்கி குடிக்கும் இளையோருக்கு அந்த உணவில் இருக்கும் அரசியல் விளங்குவதாக தெரியவில்லை.
முள்ளிவாய்க்கால் கஞ்சி நோய் தொற்று உடையது என்று திருகோண மலையில் போலீசார் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நாடு முழுவதும் தானமாகக் கொடுக்கப்பட்ட வெசாக் உணவுகள்,குடிபானங்களை போலீசார் நோய்த் தொற்று உடையது என்று குற்றம் சாட்டவில்லை. வழக்குப் போடவில்லை. ஒரே நாடு இரண்டு நீதி? இந்த உணவு அரசியலை தமிழ் இளையோரில் ஒரு பகுதியினர் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை?
ஆனால் இதே இளையவர்களில் ஒரு பகுதியினர் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கார்த்திகைப் பூவை போன்ற ஒரு வடிவத்தை உருவாக்கினார்கள். அது பின்னர் போலீசாரின் விசாரணைக்குள் வந்தது.அந்தச் சின்னத்தை உருவாக்கிய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் உட்பட முழுப் பாடசாலைச் சமூகமும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதன்மூலம் எதிர்காலத்தில் அதுபோன்ற சின்னங்களை பாடசாலைச் சமூகங்கள் உருவாக்க கூடாது என்ற அச்சுறுத்தல் மறைமுகமாக விடுக்கப்பட்டது.
அதில் சம்பந்தப்பட்டதும் தமிழ் இளையோர்தான்.இங்கு வெசாக் பந்தலில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடித்ததும் தமிழ் இளையோர்தான்.
இந்த இரண்டு விதமான இளையவர்களும் ஒரே சமூகத்துக்குள் இருந்துதான் வருகிறார்கள். எனவே இங்கு பிரச்சனை இளைய தலைமுறையில் இல்லை. அவர்களை வழிநடத்தும் பெற்றோர்,முதியோர்,ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூகத் தலைவர்களில்தான் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாமா? வெசாக் பந்தல்களில் அன்னதானம் வாங்கிய இளையோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு குற்றப்பொருள் ஆக்கப்பட்டதை யார் எடுத்துக் கூறியிருக்க வேண்டும்?
15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட யுத்த களத்தை நினைவு கூர்வதற்கு உணவையே ஒரு நினைவுப் பொருளாக தமிழ் மக்கள் மாற்றினார்கள். ஆனால் அரசாங்கம் அந்த உணவை ஒரு குற்றம் என்று கூறப்பார்க்கின்றது. 15 ஆண்டுகளின் பின்னரும் நிலைமைகள் மாறவில்லை என்பதனை அது காட்டுகின்றது. இதுதொடர்பாக இளையோருக்கு யார் எடுத்துக் கூறியிருந்திருக்க வேண்டும் ?
ஒருபுறம் கார்த்திகை பூவை ஒரு பாடசாலையின்’மெய் வல்லுநர் போட்டியில் காட்சிப்படுத்தியதற்காக ஒரு பாடசாலை சமூகம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அதே கார்த்திகைப் பூவை அண்மையில் டி எஸ் ஐ நிறுவனம் தன்னுடைய செருப்புக்களில் பதித்து விற்க முற்பட்டது. அது சமூக வலைத்தளங்களில் விவகாரமாகியது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் டிஎஸ்ஐ நிறுவனம் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். தமிழ் மக்கள் டிஎஸ்ஐ உற்பத்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கார்த்திகைப் பூ தமிழ் மக்களைப் பொறுத்தவரை மதிப்புக்குரியது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே அது பழந்தமிழ் இலக்கியங்களில் செங்காந்தள் என்று அழைக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் அந்த பூவுக்கு ஒரு அரசியல் முக்கியத்துவத்தை வழங்கியது. அந்த அரசியல் பரிமாணம் காரணமாகத்தான் அந்தப் பூவைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றது. அந்தப் பூவை ஒரு நினைவாக மாணவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவதை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கின்றது. 15 ஆண்டுகளின் பின்னரும் அரசாங்கம் கஞ்சிக்கும் பூவுக்கும் பயப்படுகின்றது.
டி எஸ் ஐ நிறுவனம் கார்த்திகைப் பூவை செருப்பில் பதித்தமை தற்செயலானது அல்ல. அதை ஒரு விளம்பர உத்தியாக, வியாபார உத்தியாக அவர்கள் செய்திருக்கலாம். சர்ச்சைக்குரிய ஒரு பூவை காலில் போட்டு மிதிப்பது என்பது அவர்களுக்கு வருமானத்தைக் கூட்டும் ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் அங்கே மிதிக்கப்படுவது பூ மட்டுமல்ல,தமிழ் மக்களின் உணர்வுகளும்தான்.
சில ஆண்டுகளுக்கு முன் தனது சேலையில் பௌத்த சின்னங்களைப் பொறித்திருந்த காரணத்துக்காக ஒரு பெண்ணுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முற்பட்டது.பௌத்த மதச் சின்னங்களை அவ்வாறு ஆடைகளில் பதிப்பது பௌத்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்ற ஒரு விளக்கத்தை அரசாங்கம் கொடுத்தது.
மேற்கத்திய பண்பாட்டில் இதுபோன்ற விடயங்கள் ஒரு விவகாரம் அல்ல. அங்கெல்லாம் தேசியக் கொடியை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அவமதிப்பார்கள். ஆனால் அதை மேற்கத்திய ஜனநாயகப் பண்பாடு சகித்துக் கொள்கின்றது. ஆனால் கீழேத்தேய உணர்வுகளைப் பொறுத்தவரை நிலைமை அப்படி அல்ல. இங்கு மதச் சின்னங்கள் அல்லது ஒரு சமூகத்தில் மதிக்கப்படும் சின்னங்கள், குறியீடுகள் போன்றன அவமதிக்கப்பட்டால் அது சில சமயங்களில் கலவரங்களாகவும் முடிவதுண்டு.
மேற்கத்தியப் பண்பாட்டில் புனிதமானவைகள் அவமதிக்கப்படும் பொழுது அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு ஜனநாயக விரிவு உண்டு. ஆனால் கஞ்சியை அதாவது உணவை ஒரு குற்றமாகக் கருதும் இலங்கை அரசியல் பரப்பில்; ஒரு பூவைக் குற்றமாகக் கருதும் இலங்கை அரசியல் பரப்பில்; அது போன்ற ஜனநாயக விரிவை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் கஞ்சியும் பூவும் குற்றமாக கருதப்படலாம் என்றால், அங்கே ஜனநாயக இதயம் பலவீனமாக இருக்கிறது என்று பொருள். கஞ்சியை, பூவை புனிதமாக, மதிப்புக்குரியதாகக் கருதும் ஒரு கூட்டு மனோநிலை அந்த நாட்டில் உண்டு என்று பொருள். அதை வேறொரு பிரிவு சகித்துக் கொள்ளவில்லை என்று பொருள். இந்த விடயத்தில் இலங்கை தீவில் இரண்டு நீதிகள் உண்டு என்று பொருள்.
கார்த்திகைப் பூவை காட்சிப்படுத்தியதற்காக ஒரு பாடசாலை சமூகம் பொலிசாரால் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறது. அதே கார்த்திகைப் பூவை ஒரு பாதணி உற்பத்தி நிறுவனம் அவமதிக்கும் பொழுது அது ஒரு சட்டப் பிரச்சினையாக வரவில்லை.அது இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பாதிக்கும் ஒரு நடவடிக்கை என்பது அந்தப் பாதனி நிறுவனத்துக்கு தெரிந்திருக்கவில்லையா?
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் எதிர்ப்பு அறிக்கையையடுத்து டிஎஸ்ஐ நிறுவனம் அந்த அமைப்போடு தொடர்பு கொண்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தில் கொழும்பை மையமாகக் கொண்டு இயக்கும் ஒரு ஊடகம் இடைத்தொடர்பாளராக செயல்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.டிஎஸ்ஐ நிறுவனம் இதுவிடயத்தில் தங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியமைக்காக அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஐங்கரநேசன் கூறியுள்ளார்.மேலும் டி.எஸ்.சி நிறுவனம் அதன் காட்சியறைகளில் வைக்கப்பட்டிருந்த செருப்புகள் மீளப்பெறப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் பரப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பை ஒரு கொழும்பு மையப் பெரு நிறுவனம் கவனத்தில் எடுத்தமை முக்கியமானது.
அதே சமயம் இலங்கைத் தீவின் அரசியலானது உணவு, பூ போன்ற பொருட்களுக்கு எல்லாம் உணர்திறன் மிக்கதாக இருப்பது என்பது,அதுவும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் அவை உணர்திறன் மிக்கவைகளாகக் காணப்படுவது எதைக் காட்டுகின்றது?