2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முக்கிய அறிவிப்பினை அரசாங்கம் அறிவிக்கவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட வேறு பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதுடன் முதலாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர்.
இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.