”நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும்” என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.