சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என மீனவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
சட்டவிரோத மீன் பிடி தொடர்பாக மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விரைவில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வாரத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் பிரச்சனை தொடர்பான கூட்டத்தில் முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் மீனவர்களிடம் உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.