30 வருட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்கப்பெறும் என ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆளுந்தரப்பினருக்கு மக்கள் ஆணையில்லை என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குத் தான் மக்கள் ஆணையில்லை. வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எவரும் மறந்துவிடவில்லை.
பொதுஜன பெரமுன கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.இந்த நாடு அபிவிருத்தி செய்யப்பட்டது மஹிந்தராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலேயே. 30 வருட உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதலை முறியடித்து இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியவர் மஹிந்த ராஜபக்ஷ.
அதனையும் நாட்டு மக்கள் மறக்கவில்லை. தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எவ்வாறாயினும் ராஜபக்ஷ தரப்பினரை நாட்டை விட்டு வெளியேற்றியது போன்று ஒரு நிலை விரைவில் தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்படும்” இவ்வாறு பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.