திபெத் பீட பூமியின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நடவடிக்கையானது சீனா அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக கூறி பெயர் வைத்தமைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது.
திபெத் பகுதியைப் பற்றி நன்கு வரலாற்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த மறுபெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், இதற்கு டெல்லி அனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் தொடர்பாக இந்திய இராணுவம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கேற்ப இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கான வரைபடங்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்திருந்தது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்தே, பிரதமராக மோடி மூன்றாவது முறை பதவியேற்ற நிலையில், சீனாவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திபெத்திய பகுதிகளுக்கு மறுபெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த 30 இடங்களில், 11 இடங்கள் மக்கள் வாழுமிடங்களும், 12 மலைப்பகுதிகளும், 4 ஆற்றுப்படுகைகளும், 1 ஏரியும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.