நாட்டில் வெள்ள நீர் வடிந்து வருவதால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து வருவதாகவும் இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் தொற்றுக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காணப்படும் கழிவுப் பொருட்கள் ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகின்றன.
ஈக்களின் அதிகரிப்பு மிகவும் ஆபத்தானது. இதன்காரணமாக வயிற்றுப்போக்கு , வாந்திபேதி மற்றும் வைரஸ் காய்ச்சல் என்பன ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே ஈக்கள் பெருகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடவேண்டும். குறிப்பாக குப்பைகளை அகற்றுதல், சுத்தமாக நீர் ஆதாரங்களைப் பராமரித்தல் மற்றும் மூடி வைக்ககூடிய கொள்கலன்களைப் பயன்படுத்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை பொது மக்கள் ஈடுபடுவது அவசியமாகும்” இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் வலியுறுத்தியுள்ளார்.