மக்கள் விடுதலை முன்னணி, 13 ஆவது திருத்ததை நடைமுறைப்படுவத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாட்டை வரவேற்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்., நகரின் தீவகப்பகுதிகளில் போக்குவரத்து, மாணவர்களின் கல்வி நிலைமை மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான தண்ணீர் பிரச்சினைகள் இன்றும் காணப்படுகின்றன.
யுத்தம் நடந்த பிரதேசங்களில் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாம் அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்துவோம். நாட்டிலுள்ள சட்டத்தினை நடைமுறைபடுத்துவதில் இந்தளவு பிரச்சினைகள் காணப்படுமாயின், அதனை நிச்சயமாக நாம் நடைமுறைபடுத்துவோம்.
எமது தலைவர் சஜித் பிரேமதாஸ அதனை நிச்சயம் முன்னெடுப்பார். முதற்கட்டமாக மாகாண சபையின் தேர்தல் நடத்தப்படும். தற்போது ஆட்சியில் ஏகாதிபத்திய அரசாங்கம் பதவி வகிக்கின்றது.
ஜனாதிபதியின் கையில் அதிகாரம் உள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள, காணி – பொலிஸ் அதிகாரத்தை, நடைமுறைபடுத்த உள்ளோம்.
இன்று அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரும் 13 ஆவது திருத்த சட்டத்தினை நடைமுறைபடுத்துவதாக கூறியுள்ளார்கள். இதனை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு சுமார் 35 வருடங்கள் எடுத்துள்ளது.
கடந்த தேர்தலில் சஜித்திற்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், சிங்கள மக்களின் வாக்கோடு கோட்டாபய ஆட்சிக்கு வந்தார். இது ஒரு ஜனநாயக நாடு.
யாரும் இங்கே போட்டியிடமுடியும் எல்லா இடத்திலும் இனவாத குழுகள் இருக்கிறது,
அந்த தருணங்களில் எமது தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு ஆதரவாக செயற்படமாட்டார்.
மாறாக அனைத்து இனங்களுடனும் மதங்களுடனும் இணைந்தே செயற்படுவார்.
35 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தது போன்று தெற்கிலுள்ள மேலும் பல இனவாத குழுக்களை சேர்ந்தவர்களும். எதிர்காலத்தில் முன்வருவார்கள்” இவ்வாறு இரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.