நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு முப்பெரும் விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.