இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை, இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை பாரிய சந்தேககத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சரின், இலங்கை விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் வலியுத்தினார்.
குறைந்த மணித்தியாலங்களை கொண்ட விஜயமாக இது அமைந்துள்ளதாகவும், இவ்வாறு திடீர் ஏன் அமைய வேண்டும்? எனவும் இதன் பின்னணி என்ன? எனவும் அவர் சபையில் கேள்வியெழுப்பினார்.
ஆட்பதிவு திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ள விசேட அடையாள அட்டை உட்பட 10 முதல் 12 வரையிலான செயற்றிட்டங்களை கைச்சாத்திடுவதற்கு, இலங்கைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தம்மால் அறிய முடிவதாக விமல் வீரன்வன்ச குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வாறான நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் துரித விஜயத்தின் நோக்கம் என்ன? என அவர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும், இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கல், அதானி குழுமத்துக்கு மின்கட்டமைப்பை வழங்கல் உள்ளிட்ட செயற்றிட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் காணப்படுவதாகவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.