இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் நேற்று தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக அமையாது எனவும் இந்தியா வழங்கிய 13 ஆவது திருத்தம் வேறு இங்குள்ள தலைவர்கள் அமுல்ப்படுத்துவதாகக் கூறும் 13 ஆவது திருத்தம் வேறு என தமிழ் தலைவர்கள் இந்திய அமைச்சர் ஜெஸ்ஷங்கரிடம் எடுத்துரைத்தனர்.
அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவது குறித்தும் தமிழத் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெஸ்ஷங்கரிடம் தெரிவித்திருந்தனர்.
மேலும் ஒன்றையாட்சிக்குள் தமிழர்களுக்கான தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதனை இந்தியா ஏற்றுக்கொண்டு சமஷ்டி முறையிலான தீர்வை எட்டுவதற்கு இந்தியா உதவ வேண்டும் எனவும் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறீதரன், சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.கஜேந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.