”இலங்கை -இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் மூன்று படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனதாகவும் எனவே, இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தமிழ் நாட்டில் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.