”திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.கவினர் முயற்சி செய்வதாக” தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மதுபானம் பருகி உயிரிழந்தவர்கள் தொடர்பாக விவாதிக்கக் கோரி சட்டப் பேரவையில் இன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட அனைவரையும் வெளியேறுமாறு சபா நாயகர் உத்தரவிட்டார்.
அத்துடன் ஒருநாள் சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்பதற்கும் சபாநாயகர் தடை விதித்தார்.
இந்நிலையில் இது குறித்து சட்டப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்” சட்டப்பேரவையில் அ.தி.மு.கவினர் தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும், திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”அ.தி.மு.கவினரின் ஆர்ப்பாட்டத்தை தவறு எனக் கூறவில்லை எனவும், ஜனநாயக முறைப்படி போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் ” கேள்வி நேரம் முடிந்த பிறகு இது குறித்து விவாதிக்கலாம் என பேரவைத் தலைவர் கூறியபிறகும், கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் முயற்சி செய்தனர் ”எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.