கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இயற்கை காரணங்களைப் போன்று, ஒழுங்கற்ற மனித செயற்பாடுகளும் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையை எதிர்கொண்ட பிரதேசவாசிகள் சிலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.