எஹலியகொடை, அராபொல பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று, வீட்டில் வசித்துவந்த வயோதிப தம்பதியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் வயோதிபத் தம்பதியினர் மாத்திரமே வசித்து வந்த நிலையில் இக்கொடூர சம்பவம் அரங்கேரியுள்ளது.
மேலும் வீட்டுக்குள் நுழைந்த கும்பல், வயதான மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்ததோடு, வீட்டின் குளியலறைக்கு அருகில் கணவரையும் தாக்கி, கை, கால்களை கட்டியதாகவும், இத்தாக்குதலில் கணவரும் இறந்துவிட்டதாக கருதிய பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவே வீடு புகுந்து இந்த கும்பல் கொலை செய்திருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் படுகாயமடைந்து எஹலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்று தெரிவித்துள்ள எஹலியகொடை பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.