பொலிசார் புலனாய்வு அலுவலர் என்ற வகையில் தங்களது புலனாய்வு மற்றும் விசாரணைகளின் போது பொலிசார் பொதுமக்களை சித்திரவதைக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தையொட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு’ நேற்றைய தினம் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குற்றவியல் சட்டப் புலனாய்வுகள் பொலிசில் முறைப்பாடொன்றினைச் செய்வதன் மூலமோ அல்லது முறைப்பாடின்றியோ பொலிசார் விசாரணைகளை ஆரம்பிக்கலாம். அம்மீறல்களை புலனாய்வு செய்வதன் நோக்கம் யார் யாருக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு இயன்றளவு விடையளிப்பதாகும் என தெரிவித்தார்.
குற்றங்களை முறைப்பாடு செய்ய நிலையத்திற்கு வருபவர்களை அன்போடு ஆதரித்து வார்த்தைப் பிரயோகங்களை எவரது மனமும் புண்படாத வகையில் பாவிக்கவேண்டும் எனவும், இது மனித கௌரவத்தை பாதுகாக்கும் என்பதால் சித்திரவதைக் கலாச்சாரத்தை இல்லாதொழிப்பதற்கு அனைவர்களும் முன் வந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையைச் சேர்ந்த வைத்தியகலாநிதி. எம்.ஏ.சி.எம். பசால், மனித உரிமைகள் அதிகாரி பி.எம்.எம். பெறோஸ் ஆகியோர் விரிவுரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.