நாட்டின் சிலபகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவு பகுதிகளிலும் , வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.